
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுவரை 747 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 100 ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களுக்கெதிராக 14 வழக்குகளில் உயர் நீதிமன்றில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர், சனல் 4 அலைவரிசை வெளிப்படுத்திய உண்மைகள் மற்றும் அதற்கு வெளியில் முன்வைக்கும் உண்மைகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் என்றார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கட்டம் கட்டமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மைகளை கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்து விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில், பன்னிரண்டு சிவில் சாட்சிகள், ஏழு இராணுவத்தினர், இருபத்தி நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.