
யோஷித ராஜபக்ச மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான தனித்தனியான நில பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக மற்றுமொரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவர் மீதும் ரத்மலானை மற்றும் தெஹிவளை பகுதிகளில் உள்ள சிரிமல் உயனவில் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்களை ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமாக வாங்கியது தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனவரி 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு, சிரிமல் உயனவில் 34.5 பேர்ச் நிலத்தை ரூ. 36 மில்லியனுக்கும் அதிகமாக வாங்கியமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனை தொடரந்து, கடந்த ஜனவரி 27 ஆம் திகதி கொழும்பு கூடுதல் நீதவானால் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.