
பெறுமதிமிக்க வாக்குகளை பணம் கொடுத்து வாங்கி தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மிகவும் மோசமான கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்திற்கு பேருவளை மக்கள் இதன் பிறகாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.சீனங்கோட்டை பிட்டவளையில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் இடம் பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி நகரசபை தலைமை வேட்பாளர் மபாஸிம் அஸாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி, தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ், அக்கரகொடை வட்டார வேட்பாளர் ரிகாஸ் ஸாலி, கன்கானங்கொடை வட்டார வேட்பாளர் ஸெய்யித் அஹமத் உட்பட ஏனைய வட்டார வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.புpரதி அமைச்சர் மேலம் கூறியதாவது – நான் ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் கல்வி கற்கின்ற காலத்தில் அதிக பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி தனது வெற்றியை உறுதிப்படுத்தும் முறை காணப்பட்டது. அந்த கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் இன்றும் கூட நிகழ்வது பற்றி கேள்விப்பட்டேன்.பணத்திற்கு வாக்குகளை வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்காத ஒரு மோசமான செயலாகும். இது மனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதுடன் வாக்காளர்களை அடிமைகளாக வைத்துக்கொள்ளும் நடைமுறையாகும்.ஹஜ் வீஸா பற்றி சமூக ஊடகங்களில் போலியான பிரச்சாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் ஹஜ் வீஸாக்களைப் பெற்று தமது குடும்ப அங்கத்தவர்களையும், நண்பர்களையும் தமது ஆதரவாளர்களையும் ஹஜ் கடமைக்காக அழைத்துச்சென்றனர்.
ஏழை எளிய மக்களுக்குறிய அந்த ஹஜ் வீஸாக்களைக் கூட தவறான முறையில் பயன்படுத்தியுள்ளனர். இதை மூடி மறைக்க தற்போது போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிவருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் நாட்டு மக்கள் தேசிய சக்திக்கு தெளிவான ஆணையை பெற்றுக் கொடுத்தனர்.
159 உறுப்பினர்களைக் கொண்ட சக்தி மிக்க அரசாங்கத்தை தெரிவு செய்தனர்.மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாத்து இனவாதம் இல்லாத சிறப்பான அரசாங்கமாக இந்த அரசு பயணம் செய்து வருகிறது.நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கூட நாம் வரலாறு காணாத பெரு வெற்றியை பெற்று உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம்.
பேருவளை மக்களும் இப் பயணத்தில் எம்மோடு இணைய வேண்டும்.ஆளும் கட்சிக்கு வாக்களித்து எமது பகுதியின் அபிவிருத்தியை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
பேருவளை நகர சபை பகுதியை நாம் சிறப்பாக கட்டியெழுப்புவோம். மே மாதம் 2ஆம் திகதி சரியாக முடிவு எடுத்து எமது எதிர் காலத்தை தீர்மானியுங்கள். பணத்திற்கு வாக்குகளை வாங்கும் கீழ் தரமான அரசியல் கலாச்சாரத்திற்கு பேருவளை மக்கள் இனியும் இடமளிக்காதீர்கள் என்றார்.





