ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார், அக்கட்சியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அவர் கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள சுப்பையா ஆனந்தகுமார் கூறியவை வருமாறு,“2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த பின்னர் கட்சியை விட்டு பலரும் வெளியேறினர்.
எனினும், கட்சியின் வளர்ச்சிக்காக கஷ்டமான காலகட்டத்திலும் நாம்தான் களத்தில் இறங்கி செயற்பட்டிருந்தோம்.
கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர்கூட, எவ்வித கொடுப்பனவும் பெறாமல்தான் பணிகளை முன்னெடுத்து வந்தோம். அரச வாகனங்களைக்கூட பயன்படுத்தியது கிடையாது.
அரச வளங்களையும் பெற்றது கிடையாது. எனினும், கட்சியில் உள்ள ஒரு சிலரின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. அதுமட்டுமல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட, ராஜபக்சக்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளுக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் இம்முறையும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் பயணத்தை தொடரப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன்.
அந்தவகையில் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் பதவியை துறக்கின்றேன். கட்சியில் இருந்தும் வெளியேறுகின்றேன்.” – என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது