எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (04) நிராகரிக்க உத்தரவிட்டுள்ளது.
எனவே பொதுத் தேர்தல் ஏற்கனவே திட்டமிட்டப்படி இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் ஒருவர், “நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின்” ஏற்பாட்டாளர் H.M. பிரியந்த ஹேரத் ஆகியோர் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
பொதுத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடாத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் சட்டங்களின் விதிமுறைகளுக்கு முரணாகவே பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வாக்கெடுப்பை நடத்துவதற்கான தினம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் , சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.