
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி டிசம்பர் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன சந்தையை முறையாக திறக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதன்படி, வாகனச் சந்தை மூன்று வகைகளில் திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்காக டிசம்பர் 14 ஆம் திகதி முதல் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பொருட்களை கொண்டு செல்வதற்கும் தனிப்பட்ட பாவனைக்காகவும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது 2025 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது நாட்டில் டொலர் நெருக்கடி உருவாகும் என எந்தவொரு தரப்பினரும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.