
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 13 வகை மருந்துகள் முறையான தரமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பதின்மூன்று மருந்துக் குழுக்களும், கடந்த வாரம் எட்டு மருந்துக் குழுக்களும், இந்த வாரம் ஐந்து மருந்துக் குழுக்களும் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறும் வைத்தியர், தாம் நீக்கப்பட்ட 8 மருந்துகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
மருந்துகளைக் கொண்டு வந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் சுமார் 300 மருந்துக் குழுக்கள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும், நிமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்று நிலைமைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் இருப்பதாகவும் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
ஒவ்வொரு வாரமும் இவ்வாறு மருந்து சீரழிவு காரணமாக மருந்து குழுக்கள் அகற்றப்படுவதாகவும், ஆனால் இந்த மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பணியாற்றிய அதிகாரிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான வேலைத்திட்டமொன்றை ஸ்தாபிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் தரம் குறைந்த மருந்துகளை அகற்றுவதனால் நாட்டின் கருவூலத்திற்கு பாரிய சேதம் ஏற்படும் எனவும் தற்போதைய சுகாதார அமைச்சர் இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அனைத்து அரச நிறுவனங்களும் மருந்து இறக்குமதி பொறிமுறையில் தலையிட்டு அடுத்த வருடம் இந்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் வெற்றிகரமான முறைமை மாற்றத்தை நம்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.