
யாழ். மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுக்கள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதனால் யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் நாளை (28) முதல் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது.
யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவிற்கு, எங்கேயும் நடைமுறைப்படுத்தப்படாத, எந்த ஒரு நிதிச் சுற்றறிக்கை மூலமும் பிரசுரிக்கப்படாத நடைமுறையினை மாநகர சபை கணக்காளர் பகுதி எதேச்சையாக மேற்கொள்ள முயல்வதால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் நாளை (28) முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடடுபடவுள்ளார்கள்.
வினைத்திறனற்ற கணக்காளர் (ii) இனால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு உள்ளான ஊழியர்கள் இந்த பகிஸ்கரிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு முற்று முழுதான பொறுப்பை மாநகர சபை ஆணையாளரும் கணக்காளர் பகுதியினரும் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.