
இலங்கை இராணுவம் பல்வேறு விசாரணைகளுக்காக கடந்த காலங்களில் பறிமுதல் செய்து வைத்திருந்த பொருட்களை, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2) இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிகளிலும், அவர்களின் உடமைகளாக இருந்து இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்காக இதுவரை வைத்திருந்த தங்கம், வெள்ளி, மாணிக்கங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.
இதன்படி, 120 ஆபரணப் பொதிகள் இன்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்தப் பொருட்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இலங்கை மாணிக்க மற்றும் ஆபரண அதிகார சபையால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் தீப்த ஆரியசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாணிக்க மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் நவீன் சூர்யாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தங்கப் பொருட்கள் ஆபரண அதிகார சபையால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவற்றின் மதிப்பு மற்றும் எடை அளவு பகிரங்கப்படுத்தப்பட்டு ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இந்தப் பொருட்களின் உரிமையாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை மீள ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் இதன்போது தெரிவித்தார்.