நாட்டில் 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பண்டாரநாயக்க புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கு தேவையான சகல விடயங்களையும் செய்வேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு தின நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால், மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
சிங்களம் மட்டும் பேசும் ஆங்கிலம் பேசத் தெரியாத நபர் எவ்வாறு ஆட்சிக்கு வந்தார். 56ஆம் ஆண்டு புரட்சியின் காரணமாகவே அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
எவ்வாறாயினும் அவர்கள் சிறப்பாக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றால் அது எங்களுக்கு மகிழ்ச்சியே.
56 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவலை உறுதிப்படுத்த வேண்டும்.தமக்காக அல்லாமல் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும்.
பல்வேறு பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது. இவர்களால் அதனை செய்ய முடியுமென்று நான் நம்பவில்லை.
கல்வித்துறை கேள்விக்குறியாகிவிட்டது. மக்கள் விடுதலை முன்னணியினால் கல்வித்துறையை சீராக்க முடியாது.
தனியார் வகுப்புகளை நடத்தும் சகலரும் ஜே.வி.பியுடனே இருக்கிறார்கள். அவர்களினாலேயே சுதந்திரக் கல்வி இன்று இல்லாமல் போயுள்ளது என்று குறிப்பிட்டார்.