மிதிகம, கோவியப்பன பிரதேசத்தில் செப்டெம்பர் 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட எட்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று அஹங்கம மற்றும் மிதிகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்திய துப்பாக்கிதாரிகள், துப்பாக்கி தோட்டாக்களை வழங்கிய ஒருவர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் சந்தேக நபர்களில் அடங்குவர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஆயுதம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அஹங்கம, வெலிகம மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் வசிக்கும் 20 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட போது, பிரதான சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் 15 இலட்சத்து 42 ஆயிரம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.