10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அன்றைய நாள் மிகவும் விசேடமானதாகும்.

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.09.24ஆம் திகதிய 2403/13 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது அமர்வு நாளில் சபாமண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகிறது.

முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

செங்கோல் சபா மண்படத்தில் வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.

அதன் பின்னர் சபாநாயகரை வாக்களின்பின் மூலம் நியமித்தல், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை அதன் பின்னர் பிரதி சாபாநாயகரும் குழுக்களின் தலைவரும், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரும் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.

சபாநாயகர் நியமனம் பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் சபாநாயகராகத் தெரிவுசெய்து நியமிக்க முடியும்.

எனினும், உறுப்பினர் குறித்த முன்மொழிவுக்கு அமைய தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுப்பினர் சபாநாயகராகச் சேவையாற்றுவதற்கு விரும்புகின்றாராவென்பதை முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

எவராவது உறுப்பினர் ஒருவரின் பெயரை சபாநாயகராகத் தெரிவுசெய்யுமாறு முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழியவேண்டும் என்பதுடன், இது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள முடியாது.

ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு நபர்களின் பெயர்கள் உள்ளனவா என செயலாளர் நாயகம் சபையிடம் வினவுவது கட்டாயமாகும்.

அவ்வாறு வினவும்போது பிறிதொரு நபரின் பெயர் முன்வைக்கப்பட்டிருக்காவிட்டால் குறித்த உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார்.

சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு பாராளுமன்ற முறைமையில் காணப்படுகின்றன.

அவையாவன, சபாநாயகர் தெரிவு, பிரதிச் சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு போன்றவற்றின் போதும், பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் சந்தர்ப்பதிலுமாகும்.

இரகசிய வாக்கெடுப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களை ஆகக் குறைந்தது ஒரு மாதகாலம் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேண வேண்டியதும், பாராளுமன்றத்திடமிருந்து பெறக்கூடிய ஏதேனும் பணிப்பிற்கமைய செயலாளர் நாயகம் வாக்குச்சீட்டுப் பத்திரங்களை அழித்துவிட்டு அதனைப் பாராளுமன்றத்திற்குச் சான்றுப்படுத்தலும் செயலாளர் நாயகத்தின் கடமையாகும்.

பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது பாராளுமன்ற நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.

இதில் சபாநாயகர் முதன்முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன், அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும்.

இந்தப் பெயர் அட்டவணைப் புத்தகம் பாதுகாப்பான ஆவணமாகப் பேணப்படும்.

முதலாவது பாராளுமன்ற அமர்வு தினத்தில் பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வேண்டும்.

இவர்களின் தெரிவுகள் இடம்பெறும்போது சபாநாயகர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அக்கிராசனத்தில் இருப்பதனால் குறித்த அறிவிப்பு மற்றும் வாக்கெடுப்புப் போன்றன சபாநாயகரின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும்.

பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் பதவிக்கு ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டிருந்தால், வேறு எவரினதும் பெயர்கள் முன்மொழியப்படுகின்றனவா என சபையிடம் வினவவேண்டிய பொறுப்பு சபாநாயகருடையதாகும். அவ்வாறு வேறு பெயர்கள் முன்மொழியப்படாவிட்டால் குறித்த உறுப்பினர் பிரதி சபாநாயகர் பதவிக்குத் தெரிவுசெய்யப்படுவார்.

ஏதாவது சந்தர்ப்பத்தில் இந்தப் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டி ஏற்பட்டால் சபாநாயகரின் தெரிவின்போது பின்பற்றப்பட்ட வாக்களிப்புமுறை பின்பற்றப்படும்.

இதன்போது வாக்கெடுப்பு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை சாபாநாயகர் வெளியிடுவார்.

மேலே குறிப்பிடப்பட்ட செயற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் முதல்நாள் அமர்வுகள் ஒத்திவைக்கப்படும். ஒத்திவைக்கப்படும் நாள் பெரும்பாலும் அடுத்த பாராளுமன்ற அமர்வு நாளாகவிருக்கும்.

இருந்தபோதும், அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் அன்றையதினம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்படுவதாயின், முதல் நாளின் பிரதான பணிகள் முடிவுக்கு வந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த முடியும். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *