மறு அறிவித்தல் வரும் வரை அருகமபே பகுதியைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று (11) தெரிவித்துள்ளார்..
அமெரிக்க தூதரகம் அக்டோபர் 23ஆம் திகதியன்று அருகம்பே பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கத் தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள ஆபத்து காரணமாக மறு அறிவித்தல் வரை அறுகம்பேவுக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு இலங்கை தரப்பு தற்போது அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முன்னதாக, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா, நவம்பர் 10 ஆம் திகதி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அறுகம்பே பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தினார்.
இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூர் சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போதைய திட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்படி, நாட்டிலுள்ள ஏனைய சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.