
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமை தொடர்பான விவரங்களை வெளிப்படுத்துமாறு முஸ்லிம் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியதால், இந்த விடயம் தொடர்பில் நேற்று (17) பாராளுமன்ற சபையில் பரபரப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆளுந்தரப்பு எம்.பிக்களுக்கும் எதிர்த்தரப்பினருக்குமிடையில் இந்த விடயம் தொடர்பில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம் பெற்றது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்த வேண்டுகோளை நிராகரித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கொரோனா தொற்றில் மரணித்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர், விபரங்களை வெளியிடுவதற்கு வைத்திய நெறிமுறையில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப் பினார்.
சமீபத்தில் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றிய அலுவலர்களின் எண்ணிக்கை, இவர்களின் பயணத்துக்காக செலவிடப்பட்ட தொகை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சாமர சம்பத் எம்.பி. கேள்விகளை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி நிதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நான்கு அதிகாரிகளும் மத்திய வங்கியின் ஐந்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வொஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கான தீர்மானம் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையே ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
கலந்துரையாடல்களின் சிக்கலான தன்மை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் நடத்தத் திட்டமிடப்பட்ட கலந்துரையாடல்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக வொஷிங்டன் கலந்துரையாடலில் பங்கேற்க அரசாங்கம் தீர்மானித்தது.
கலந்துரையாடலின் ஒருபகுதியை வொஷிங்டனில் நடத்த சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் ஒப்புக்கொண்டன. மற்றைய பாதி கலந்துரையாடல்களுக்கு நாணய நிதியக்குழு இலங்கைக்கு வர ஒப்புக்கொண்டது.
அதிகாரிகளின் விமானச் செலவுக்காக 7.05 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. 38,587 டொலர்கள் பயணச் செலவுக்கு செலவிடப்பட்டன.
நிதியமைச்சின் அதிகாரிகள் விமானத்தில் வணிக வகுப்பில் பயணிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.