
புறக்கோட்டை, போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள உணவகத்தில் ஜிந்துபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (21) காலை திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
சில உணவகங்கள் மிகவும் அசுத்தமான நிலையில் இருந்ததோடு, சமையல் அறைக்கு அருகில் சமையல் செய்யும் இடங்களில் எலிகளின் கழிவுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சில உணவகங்களில் சமையல் செய்யும் இடங்களில் பூனைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சோதனையின் போது, உணவக உரிமையாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, எலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், இதற்கு மாநகர சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சில கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சுகாதார வைத்திய அதிகாரி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், உணவு தயாரிப்பதற்காக உடைந்த மற்றும் பொருத்தமற்ற பிளாஸ்டிக் கொள்கலன்களை அகற்றுமாறு உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அசுத்தமாக உணவு சமைத்த அனைத்து உணவகங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.