
பொதுச்சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இந்த வாரத்தில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சகல அரச நிறுவனங்களினதும் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த வாரத்தில் அழைப்பு விடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளன. 16ஆம் திகதியிலிருந்து வாக்காளர் அட்டைகள் தபால் அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்படும்.
17ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை வாக்காளர் அட்டைகளை தபால் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
20ஆம் திகதி விசேட விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தால் முன்னெடுக்கப்படும் மனு விசாரணைகளின் தீர்ப்புக்கமைய அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது வரையில் மே மாதம் 06ஆம் திகதி தேர்தலை நடத்தும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.