உள்ளூராட்சித் தேர்தலில் பேருவளை நகர சபையை வெற்றி பெறுவதற்கு ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு எந்தச் சவாலும் கிடையாது என சீனன் கோட்டை அக்கரகொட வட்டார வேட்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான ரிகாஸ் ஸாலி தெரிவித்தார்.

சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெருமளவிலான ஆதரவாளர்கள் பங்கு பற்றிய இக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது,பேருவளை நகர சபை தேர்தலில் மக்கள் எதிர் கட்சியினருக்கோ சுயேட்சை அணிக்கோ வாக்களிப்பதினால் எந்த பலனும் கிட்டப் போவதில்லை.

ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் நகர சபை பகுதியை துரிதமாக கட்டியெழுப்பலாம்.

பேருவளை மக்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாது.பேருவளை நகர சபை பகுதியில் உள்ள அனைத்து வளங்களையும் நன்கு பயன்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.

பேருவளை வாழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியிடம் இம் முறை நகர சபையை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதை எமக்கான ஆதரவு மூலம் தெரிய வருகிறது.ஊழல், இலஞ்சம் இல்லாத அதிகார துஷ்பிரயோகமற்ற நகர சபையாக பேருவளை நகர சபையை மாற்றியமைத்து மக்களுக்கு நல்ல பணிகளைச் செய்வோம்.

கடந்த 6 – 7 தசாப்தங்களாக இந்த நகர சபையை மாறி மாறி ஆட்சி செய்தவர்களினால் மக்களுக்கு சிறப்பான சேவையை பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது. பேருவளை நகர சபை பிரிவின் நிலையோ மிகவும் பரிதாபமானது.

தேர்தலில் பல வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளைப் பெற்று பின்னர் அதனை மறந்து விடுகின்றனர்.தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சியே உள்ளன. அரசாங்கத்துடன் ஒத்துழைக்கக் கூடிய நகர சபையை மக்கள் தெரிவு செய்து நமது பகுதியை முன்னேற்றிக் கொள்ள முயல வேண்டும்.அக்கரகொட வட்டார மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை பெற்றுக் கொடுப்பேன்.

பணம் சம்பாதிக்கவோ நகர சபை உறுப்பினர் பட்டத்தை வைத்து பெருமைப் படவோ நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பிரதேச மக்களுக்கு சேவை செய்யும் இலக்குடன் களமிறங்கியுள்ளேன் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *