உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு புதிய விசாரணையை புதியதொரு குழுவினூடாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான விசாரணையை நடத்துமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தாக்குதல் சம்பந்தமான செய்திகளை புறந்தள்ளியமை, தாக்குதல்தாரிகளுடன் தொடர்பில் இருந்த பிரமுகர்கள், பாதுகாப்பில் இருந்த ஓட்டைகள், இந்த சம்பவம் தொடர்பில் ஆசாத் மெளலானா என்பவர் வெளிநாட்டில் வழங்கியுள்ள சாட்சியம் என்பன தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறையின் உயரதிகாரி ஒருவர் நேற்றிரவு ‘தமிழன்’ செய்திகளிடம் தெரிவித்தார்.
அதனடிப்படையில், நீதிமன்ற அனுமதி யுடன் முக்கிய பிரமுகர்கள் பலர் கைது செய்யப்படலாமென்றும் அந்த அதிகாரி குறிப் பிட்டார். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணை இடம்பெற்று அதிரடியான நடவடிக்கைகள் வருமாயின் அது ஆளுந்தரப்புக்கு மக்கள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யுமென அரச மேல்மட்டத்தில் கருதப்படுவதாக மேலும் தெரியவந்தது.சி.ஐ.டியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர அதிர்ச்சித் தகவல் இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் சி.ஐ.டியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவின் ‘ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல், அரசின் நிழல்கள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் ஷானி அபேசேகர இவ்வாறு தெரிவித்தார்.‘
‘விசாரணைகளின் முக்கிய தருணங் களின்போது இராணுவப் புலனாய்வாளர்கள் சி.ஐ.டியினரை தவறாக வழிநடத்தினார்கள் எனத் தெரிவித்துள்ள அவர் புலனாய்வு அமைப்புகளுக்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி 250 பேரை பலிகொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் அல்ல, நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று. விசாரணைகளின் போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தெஹிவளையில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள் எனத் தெரிவித்துள்ள ஷானி அபேசேகர, அந்த தற்கொலை குண்டுதாரிக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம் இது மறைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை(2018) விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என இராணுவப் புலனாய்வு பிரிவினர் குற்றம்சாட்டினர்.
தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக இராணுவச் சீருடையை அங்கு மறைத்து வைத்தனர் என சி.ஐ.டியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25ஆம் திகதி இந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சி.ஐ.டியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தாக்குதலுக்கு இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் நிதியுதவி செய்தனர் என தெரிவித்திருந்தார். இது குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஷானி அபேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.வவுணதீவு கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என நான்கு தடவை இராணுவபுலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள ஷானி அபேசேகர இதற்கான நோக்கம் என்னவென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகிய இருவருமே இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் தொடர்பான தகவல்களை வழங்குவதில் தவறாக வழிநடத்தப்பட்டதாக ஷானி அபேசேகர தெரிவித்தார்.மேலும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் விசாரணைகளை ராஜபக்ஷ ஆட்சி தடை செய்ததாக ஷானி அபேசேகர குற்றம் சுமத்தினார்.அத்துடன், பிரதமரை நியமிப்பதற்கு முன்னரே தன்னை இடமாற்றம் செய்ய கோட்டா உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் எனவே ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாகவும் ஷானி அபேசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.