
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் நியமனத்தை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அடுத்த சில நாட்களில் இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவறான நடத்தை மற்றும் அதிகார துஸ்பிரயோகம் காரணமாக தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்க ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கக் கோரும் தீர்மானம், 2025 ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின்படி நியமிக்கப்படவுள்ள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு, தலைமை நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் இருக்கும்.
இந்தநிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் அனுப்பிய அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ குழுவின் தலைவராக ஒரு மூத்த உயர்நீதிமன்ற நீதியரசரின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.
அதேநேரம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க குழுவின் உறுப்பினராக இருப்பார்.
இதனையடுத்து, மூன்றாவது உறுப்பினர், சட்டம் அல்லது பொது நிர்வாக முகாமைத்துவ துறையில் சிறந்து விளங்குபவராகவும், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒப்புதலுடன் சபாநாயகரால் நியமிக்கப்படுபவராகவும் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.