அம்புலுவாவ (Ambuluawa) பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கம்பளை (Gampola) உடபலத்த பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமது திட்டத்திற்கு அதிகாரிகளால் இடையூறு ஏற்படுவதாக தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களான எம்.லாஃபர் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகிய இருவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த இடைக்கால தடை உத்தரவு ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 1,621.5 மீற்றர் ரோப்வேயுடன் கூடிய கேபிள் கார் திட்டத்தை உருவாக்க, இயக்க மற்றும் மாற்றுவதற்கான திட்டத்திற்கு பிரதேச செயலாளர் சட்டவிரோதமான முறையில் தலையீடு செய்கிறார் எனவும் தங்களுடைய சேவையை முன்னெடுப்பதற்கு தடையாக உள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஷெஹானி அல்விஸ் மற்றும் நமிக் நஃபத் ஆகியோர் மனுதாரர் சார்பில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *