“நம்பிக்கையின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியை கைவிடாமல் இருக்கிறோம். எங்களின் நம்பிக்கையை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒருபோதும் மீறியதில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றியுள்ளார். ஐக்கிய மகளிர் முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை இராஜிநாமாச் செய்வதற்கான கடிதத்தை ஏற்றுக்கொள்ள கட்சி தயாராக இல்லை இருந்தபோதும், எனது தேர்தல் செயற்பாடுகளை திட்டமிட்டபடி நான் முன்னெடுத்துச் செல்வேன். அதேபோன்று கட்சியை பாதுகாக்க முடிந்த சகல முயற்சிகளையும் செய்வேன்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,கட்சியின் பொதுச் செயலாளருக்கு எனது கடிதத்தை ஒப்படைத்திருக்கிறேன்.
ஆனால், அந்தக் கடிதத்தை கட்சியினால் பொறுப்பேற்க முடியாது என்று கட்சிக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
கட்சியையும் கட்சியின் தலைவரையும் நெருக்கடிக்குள்ளாக்குவதற்காக நான் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.
வேறு சில காரணங்களுக்காகவே அந்த தீர்மானத்தை எடுத்தேன்.ஒருசில காரணங்களை ஊடகங்களுக்கு கூற முடியும். மேலும் சில காரணங்களை கூற முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாடு முழுவதும் பெண்களுக்கான கூட்டங்களை நடத்தி என்னால் முடிந்த அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன்.
இருந்தபோதும், தலைவருக்காக கடுவலை தொகுதியில் எனக்கு அநேகமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் போனது.
ஆனால், தற்போது இடம்பெறவுள்ளது எனக்கான தேர்தல். எனது தேர்தல் தொடர்பிலும் நான் கவனம்செலுத்த வேண்டும்.
ஐக்கிய மகளிர் கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில மாத்திரமல்ல, நாடு பூராகவும் செயலாற்ற வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் கட்சிப் பதவிகளை மாற்றுவோம்.
அதற்கமைய எனது பதவியை இன்னுமொருவருக்கு பொறுப்பளிப்பதற்காகவே இராஜிநாமா கடிதத்தை ஒப்படைத்தேன். ஆனால், கட்சியின் செயலாளர் அதனை ஏற்கத் தயாராக இல்லை.
எனது தேர்தல் செயற்பாடுகளை நான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன். நான் ஒரு போதும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட மாட்டேன்.
இதனை தாண்டி எங்களால் எங்கும் செல்ல முடியாது. மிக கஷ்டத்தின் மத்தியில் இந்தக் கட்சியை கட்டியெழுப்பியுள்ளோம்.
கட்சிக்குள் எந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கும் கட்சி சீர்குலையாமல் இருப்பதற்கும் எங்களால் முடிந்த எங்களின் எல்லைக்கு அப்பால் சென்றாவது முயற்சிகளை எடுப்பேன்.
கட்சியை வீழ்ச்சிக்குள்ளாக்க விட மாட்டேன்.அவ்வாறு பிரச்சினை எழுந்தால் கலந்துரையாடி தீர்த்துக்கொள்வேன்.
எனது பிரச்சினைகளுக்கு தலைவரே தலையிட்டு தீர்வைக் கொடுத்துள்ளார்.
நம்பிக்கையின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியை கைவிடாமல் இருக்கிறோம்.
நம்பிக்கையையும் கட்சியின் தலைவர் மீறியதும் இல்லை.
எனக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றியுள்ளார் என்றார்.