நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பகுதியில் நேற்று முன்தினம் (17) இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி அறிவித்தல்படி நாட்டில் முட்டை விலையும் அரிசியும் விலையும் இன்னும் குறையவில்லை. ஆரம்பத்தில் உண்மையை கூறிய நாங்கள் மக்கள் மத்தியில் கெட்டவர்களாக தெரிகின்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையினை முறையாக பின் தொடர்ந்தால் கட்டாயம் பொருட்களின் விலைவாசி குறைவதற்கு வாய்ப்பு காணப்படுகிறது.
தற்போதய ஜனாதிபதி கடன் வாங்கமாட்டேன் என கூறினார் ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பாக 400 மில்லியன் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அவர் சிறப்பாக செயல்படுவதற்கு கட்டாயம் எங்களுடைய ஆதரவு இருக்கும். ஆனால் அவர் கூறிய சில விடயங்களை அவர் எவ்வாறு பின்பற்ற போகிறார் என்பது தொடர்பில் எங்களுக்கும் புரியவில்லை.
அதற்கு ஒரு வழியினை ஜனாதிபதி அவர்கள் ஏற்படுத்த வேண்டும். மலையக மக்களின் படித்த இளைஞர், யுவதிகள் கொழும்பு பகுதியில் தொழிலுக்கு அமர்த்தப்படுவாக அன்மையில் தலவாக்கலையில் வைத்து கூறினார். ஆனால் மலையகத்தில் உள்ள அதிகளவிலான இளைஞர், யுவதிகள் ஆசிரியர்களாக இருப்பது அவருடைய கண்களுக்கு தெரியவில்லை.
மலையகத்தில் உருவாகிய வைத்தியர்கள் தெரியவில்லை இதனை மலையகத்தில் உள்ள இளைஞர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த விடயத்தை மலையக அரசியல்வாதி ஒருவர் கூறியிருந்தால் மலையகத்தை இழிவு படுத்துவதாக விமர்சனம் செய்திருப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மலையக மக்கள் குறித்த தேர்தல் மேடையில் அதிகமாக பேசிய ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த உடன் மலையக மக்கள் குறித்து ஒன்றும் பேசுவதில்லை ஆறு தமிழ் பிரதி நிதித்துவம் வரவேண்டிய பிரதேசத்தில் இன்று மூன்று பேர் வரக்கூடிய நிலைமை உருவாகி வருகிறது. இதனை நான் கட்சி ரீதியாக கூறவில்லை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 30 கட்சிகள் 308 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
113 ஆசனங்களை பெறமுடியாத நிலை ஜனாதிபதிக்கு குறைவாகவே கானப்படுகிறது. அவர்கள் சுயேச்சை வேட்பாளர்களை அதிகமாக நியமித்து தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர்.
இது தான் உண்மை நான் எப்போதும் வரலாற்றைப் பற்றி பேசி வாக்கு கேட்க போவதில்லை விமர்சனங்களுக்கு பதில் கூறியிருக்கிறேன். மலையக இளைஞர்களுக்கு புதிய வழியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தொழில் என்ற ஒரு கலாச்சாரத்தை கொண்டு வந்தமையினால் நாடு பொருளாதார பிரச்சினையில் தள்ளப்பட்டுள்ளது.
தனியார் துறையையும் சுயதொழிலையும் நாம் நம்ப வேண்டும் பாராளுமன்றத்தில் 88 தடவை நான் பேசியிருக்கிறேன். அதில் 18 தடவைகள் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன்.மிகுதியான 70 தடவைகள் மறைக்கப்பட்ட சமூகம் தொடர்பாக பேசியுள்ளேன்.
மலையகத்தை பொருத்த வரையில் வீட்டுத்திட்டத்தை விட காணிகளுக்கு மாத்திரமே நாம் முதலிடம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு தோட்டபகுதியில் நூறு குடும்பங்கள் இருந்தால் அந்த நூறு குடும்பங்களுக்கும் வீடுகள் கிடைக்காது. அரசாங்கம் மக்களை பொறுப்பேற்க வேண்டும் அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணமுடியும் என தெரிவித்தார்.