2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டில் உரிய நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவதற்கான இயலுமை காணப்படவில்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டில் வரும் அரச விடுமுறைகள் மற்றும் பாடசாலை ஆண்டு விடுமுறையின் பின் ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றமை ஆகிய காரணிகளால் அவ்வாறு உரிய நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாடசாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை கால அட்டவணை தொடர்பில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய ஆண்டொன்றிற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளிலும் 181 நாட்கள் மாத்திரமே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை காணப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.