தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிவில் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
மேலும், கெஸ்பேவ பொலிஸ் பிரிவிலுள்ள சிறி சதஹம் பிக்ஷு மடத்தின் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியாக பரிந்துரைக்கப்பட்ட பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொபேகன பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையமொன்றில் ஊழியராக கடமையாற்றிய 57 வயதுடைய நபரொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூவருக்கும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.