
ஆளுங் கட்சியின் பாராளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சபாநாயகராக சிரேஷ்ட உறுப்பினர் நிஹால் கலபத்தியை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் 21ம் திகதி சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவதுடன், சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு எம்.பி.க்களையும் அரசாங்கம் அறிவித்த பின்னர், அந்த இரண்டு பெயர்களும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் நம்பிக்கையைப் பெறும் உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி ஆகியவை புதிய சபாநாயகரால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.