உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முழு ஆதரவு வழங்குவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் டலஸ், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

22 மாதங்களுக்கு முன்னர் கோரப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவும் கிடைக்குமென டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தேர்தலை் பிற்போடப்பட்டதால் 720 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும், அந்த பணம் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சொத்து அல்ல. பொது மக்களின் பணம் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போட தீர்மானித்த முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க, தேர்தலை நடத்த தீர்மானித்த தேர்தல்கள் ஆணைக்குழுவையும் அதன் ஆணையாளர்களையும் உயர் நீதிமன்றத்தையும் அவமானப்படுத்தியுள்ளதாக டலஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிணைமுறி மோசடி, சீனி ஊழல், விசா விவகாரம் போன்ற அரசியல் ஊழல்களுக்கு இணையாக தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஒரு பெரிய அரசியல் துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.

இந்தப் பொருளாதாரக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த டலஸ் அழகப்பெரும, புதிய தேர்தல் திகதியின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *