
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு வழங்கப்பட்டுள்ள அரச இல்லத்திலிருந்து வெளியேற நாங்கள் கூறும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. அவராகவே அந்த வீட்டிலிருந்து வெளியேற முடியும்” என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டம் நிறைவேற்றிய காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இருக்காவிட்டாலும் அதன் பின்னர் நீண்ட நாட்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துள்ளார். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதும் ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார்.
ஆகவே இந்தச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புரிந்துக்கொள்ள முடியுமென நம்புகிறோம். எனவே, நாங்கள் கூறும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.
அவராகவே அந்த வீட்டிலிருந்து வெளியேற முடியும்.சட்டத்தின் பிரகாரம் பொருத்தமான வீடொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், வீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பெறுமதியின் அடிப்படையில் 46 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டையே பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. குடும்பத்தை இதில் உள்ளடக்க முடியாது.
அரசாங்கத்தால் வழங்கக் கூடிய வீட்டையே வழங்க முடியும். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதால் பெற்றோரை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று கருதுகிறோம்.இந்தச் சட்டமே ஏனைய சகல முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் உறவினர்களுக்கும் பொருந்தும்.
இந்த சலுகைகளை நீக்கிவிட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் சுமையை குறைக்குமாறு கூறியே மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். தான் ஜனாதிபதி அல்லது ஜனாதிபதியொருவரின் உறவினர் என்பதால் அரசாங்கத்தால் தனக்கு வீடொன்று வழங்கப்படவேண்டும். அரசாங்கம் தன்னை பாதுகாக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் அது நீதியானதாக இருக்காது என்றார்.