
‘‘நீலாவணையில் புதிதாக திறக்கப்படும் மதுபானசாலையை மூடுவதற்கு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்திக் கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,கிளீன் ஸ்ரீலங்கா ஊடாக இந்த நாட்டை சிறப்பாக நடத்த முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் நீலாவணை மக்கள் ஒன்றுகூடி கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் மதுபானசாலையை ஒழிப்பதற்காக கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் முன்னேற்பாடாக நீலாவணையில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
அங்கே மதுபானசாலை அமைக்கப்படுமாக இருந்தால் மாணவர்களும் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கத்தினரும் பாதிப்படையும் நிலை உள்ளது. மூன்று மாதத்துக்கு முன்னர் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. ஆனால் தற்போது அதனை திறப்பதற்காக குறிப்பிட்ட நிறுவனமொன்று முன்னேற்பாடுகளை செய்கின்றது. அதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
மக்கள் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கமைய போராடுகின்றனர். மக்களுக்குரிய ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்க வேண்டும்.