திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கவுள்ளார்.

கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே நாளை காலை 9 மணிக்கு பதவியேற்கின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார்.

துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார்.

1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் (போர் இடம்பெற்ற காலப்பகுதியில்) மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார்.

சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேமசங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றினால் அதிகரிக்க முன்னர்) பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகிறார்.

2000ம் ஆண்டு பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிவானாக செயற்பட்ட காலத்தில் மிருசுவிலில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப்பேரை சுட்டு படுகொலை செய்த வழக்கின் விசாரணைகளை உரியவகையில் முன்னெடுத்தமைக்காக அந்த வழக்கின் தூக்குத் தண்டனை பெற்ற இராணுவச் சிப்பாயின் மேன்முறையீட்டை விசாரணை செய்து தூக்குத் தண்டனையை உறுதிசெய்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கருக்கு பாராட்டை கோடிட்டுக் காட்டியிருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *