
நாட்டில் தற்போது நிலவும் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டட நிர்மாணக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக கட்டட நிர்மாணத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 20,000 ரூபாவாக இருந்த ஒரு க்யூப் மணலின் விலை 30,000 ரூபாவரை அதிகரித்துள்ளதாக கட்டட மூலப்பொருட்கள் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துச் சென்றதால் மணல் அகழ முடியாமல் போனமையின் காரணமாகவே இவ்வாறு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மணல் தட்டுப்பாடு காரணமாக சிறிய மற்றும் பாரிய அளவிலான நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் சில கட்டட நிர்மாண மூலப்பொருட்கள் விநியோகஸ்தர்கள் அவர்களின் வியாபார நிலையங்களை கூட மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட கடல் மணலுக்கு சிறந்த கேள்வி இருந்தபோதும், தற்போது கடல் மணலின் விலையும் அதிகரித்துள்ளதால் கட்டட நிர்மாண மூலப்பொருள் விநியோகஸ்தர்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
அதேபோன்று, அதற்கு நிகராக குறைந்த விலைக்கு விற்பனைசெய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத (அகழ்ந்தெடுக்கப்பட்ட) மணலின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பில் அரசு விரைவாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்கவேண்டுமென கட்டட நிர்மாண மூலப்பொருள் விநியோகஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாடுபூராகவும் தடையில்லா மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.