ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, ஐந்தரை மாதங்களாகும் நிலையில், இதுவரையில் 5,156 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இவ்வாறு கடன் பெறுவது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு முழுவதும் கிடைத்த அரச வருமானத்தை விட இந்தக் கடன் தொகை அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பெற்றுக்கொண்ட கடனை செலவு செய்த விதத்தை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,‘‘பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமல் போனமையின் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது என்பது முழு நாடும் அறிந்த விடயமாகும். அதன் காரணமாக கடன் பெறுவது மிகவும் சிக்கலான விடயமாக மாறியுள்ளது.

இந்தப் பின்னணியில் வரவு செலவுத் திட்ட உரையின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வளவு கடன் தொகையை பெற்றுக்கொண்டுள்ளது என்பதை நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஜனாதிபதி அந்தக் கடமையை முறையாகச் செய்யவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதைச் செய்யாவிட்டாலும் கடன் பெறும் செயற்பாடுகளை மாத்திரம் சிறப்பாகச் செய்துள்ளது என்ற விடயத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவது எங்களின் கடமையாகும்.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதியாகும்போது அதாவது அரசாங்கம் பதவிக்கு வந்து ஐந்தரை மாதங்களாகும் நிலையில் இதுவரையில் 5,156 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. இதன் பாரதூரத் தன்மையை புரிந்து கொள்ளவேண்டும்.

2024ஆம் ஆண்டு முழுவதும் அரசாங்கத்தால் சேகரித்துக்கொள்ளப்பட்ட வருமானம் 4,000 பில்லியன் ரூபாவாகும்.

ஆனால், ஐந்தரை மாதத்தில் 5,156 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

இந்தக் கடனில் 3, 775 பில்லியன் ரூபா கடனை திறைசேரி உண்டியலினூடாகவும் மேலும் 1,063 பில்லியன் ரூபாவை திறைசேரி பிணைமுறிகளினூடாகவும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதற்கு மேலதிகமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளினூடாக 1,084 மில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதேபோன்று மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி போன்ற இரு அரச வங்கிகளில், வங்கிக் கடன் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு பெற்றுக்கொண்ட கடன்களை, கடன் மீளச் செலுத்துவதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அதுதொடர்பில் தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

அதன் காரணமாக இந்தப் பாரிய கடன் தொகையை பெற்றுக்கொண்டு அரசாங்கம் என்ன செய்தது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துவது அரசாங்க தலைவர்களின் கடமையாகும்’’ என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *