
உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கான மொத்த விற்பனைவிலை 215 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு சீனிக்கான மொத்த விலை 260 ரூபா வரையிலும் குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 260 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு சீனியின் விலை 290 ரூபாவாகவும் காணப்பட்டதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக 10 இலட்சம் மெட்ரிக் தொன் வெள்ளை சீனி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி வழங்கியதன் காரணமாக, நாட்டுக்கு வெள்ளை சீனி குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றமையே வெள்ளை சீனிக்கான மொத்த விலை குறைந்தமைக்கு காரணம் என இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 225 ரூபா என்ற அடிப்படையில் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 280 ரூபா முதல் 285 ரூபாவுக்கும் இடையில் சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்நிய செலாவணியை செலவு செய்து இவ்வாறு வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு தொடர்ந்து வாய்ப்பளித்தல் மற்றும் உள்நாட்டு சிவப்பு சீனியின் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் மொத்த விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.