
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (05) இரவு ஜனாதிபதியினால் சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரை வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார அங்கு ஆற்றிய உரையில், நாங்கள் விருந்தோம்பலை விரும்பும் மக்கள், அனைத்து விருந்தினர்களையும் நாங்கள் அன்புடன் அரவணைக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நரேந்திர மோடியின் சிறந்த ஆரோக்கியத்திற்கும், இந்திய மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், செழிப்பிற்கும், நமது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒத்துழைப்பு தொடரும் என்றும் அநுர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.





