பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று (08) இடம்பெறவுள்ள சபை அமர்வில் நிறைவேற்றத்துக்காக சமர்ப்பிக்கப்பட வுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப் பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.அதற்கமைய, இம்மாதத்துக்கான முதலாவது பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்றிலிருந்து எதிர்வரும் 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இன்று ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிமுதல் 10.00 மணிவரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 01 முதல் 06 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணிமுதல் காலை 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் காலை 11.00 மணிமுதல் காலை 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத் தின் இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றின் விவாதத்துக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஏப்ரல் 09ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு சட்டபூர்வ நிறுவனங்களின் 17 வருடாந்த அறிக்கைகளும் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதனைத்தொடர்ந்து மாலை 5.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான விவாதத்துக்கும் நேரத்தை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 11.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்துவதற்கும் இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *