
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த முக்கிய சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பூசா சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற கண்காணிப்பாளரை அவரது வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் நிறுவப்பட்ட Face Recognize System முறையை பயன்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான விஜேமுனி லலந்த பிரிதிராஜ் குமார, தெற்குப் பகுதியில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கரந்தெனிய சுத்தாவின் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்படுவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏகநாயக்க முதியன்சலாகே லகிந்து சந்தீப் பண்டார என்ற போலி பெயரில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல அவர் முயற்சித்துள்ளார்.
மேலும், காலி மற்றும் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுகளில் ஏராளமான கொலைகள் மற்றும் நிதி மோசடிகளுக்காகவும் அவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
சந்தேக நபர் இன்று காலை 07.50 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-404 மூலம் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.