புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, மினுவங்கொடை மற்றும் கட்டான பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,எமது பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமாகவே செய்யப்படுகிறது.

ஆனால் இன்றுவரை, உள்ளூராட்சி அமைப்புகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட வழங்குவதற்கான அமைப்பு இல்லை.

நாங்கள் சரியான வழிமுறையைப் பின்பற்றி, மோசடி அல்லது ஊழல் இல்லாமல் கவனமாகவும், சிக்கனமாகவும் செயற்படுவோம்.

தேவைகளை அடையாளம் கண்டு, ஒரு முறையான வேலைத்திட்டத்தின் மூலம் கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு முக்கியமான தேர்தல்களில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான தலைவராக நீங்கள் தலைவர் தோழர் அனுரவைத் தேர்ந்தெடுத்தீர்கள்.

அதிக சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் பாராளுமன்றம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக சென்றுசேர்வதற்கு, மக்களுக்கும் கிராமத்திற்கும் மிக நெருக்கமான உள்ளூராட்சி நிறுவனங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

அது மோசடி மற்றும் ஊழலிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியமானது.உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமே, மோசடி மற்றும் ஊழல் இல்லாத எமது அரசியல் கலாசாரத்தை கிராம மக்கள் உணர்வார்கள்.

கிராமத்திற்கு வரும் திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும், கண்காணிக்கப்பட வேண்டும், மேலும் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் கிராமத்திற்கு வரும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள், தமது நேசத்திற்குரியவர்களுக்கு வழங்கப்பட்ட காலகட்டத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும்.

கல்வியின் மிக முக்கியமான பகுதியாக முன்பள்ளிப் பருவ வளர்ச்சி இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை எதுவும் இல்லை.

இப்போது அதற்கான ஒரு முறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும். ஒவ்வொரு துறையிலும் அபிவிருத்திக்கான திட்டம் எங்களிடம் உள்ளது.கல்வி அமைச்சுக்கு பில்லியன் கணக்கு பெறுமதியான திட்டங்கள் கிடைத்துள்ளது.

ஆனால் சரியான வேலைத்திட்டம் எதுவும் இருந்ததில்லை. கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவர் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக 1,500 ஸ்மார்ட் பலகைகளைக் கொண்டு வந்துள்ளார், ஆனால் அவற்றைப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான முறையான திட்டம் இல்லை.ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை.

ஆசிரியர் கல்லூரிகள் இன்னும் பழைய பாடத்திட்டத்தையே கொண்டுள்ளன. புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நாங்கள் இப்போது அதையெல்லாம் சரிசெய்து வருகிறோம்.இந்த அனைத்து விடயங்களையும் கிராமத்திற்கு முறையாக வழங்க, கிராமத்திற்கு சரியான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள ஊழல் மோசடியற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *