எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 203 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 18 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்குச் சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியின் பின்னர் அரச அச்சகத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்படும்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றுக்கான எதிர்ப்புகளை கையேற்கும் செயற்பாடுகள் 11ஆம் திகதி பகல் 12 மணியிலிருந்து 1.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் இறுதி தினத்தன்று எதிர்ப்புகளை வெளியிடும் செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் பேரணிகள் மற்றும் ஒன்றுக்கூடல்களுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அமுல்படுத்தப்பட்ட தேர்தல் சட்டத்திட்டங்கள் உள்ளிட்ட சகல விடயங்களும் தற்போதும் அமுலில் இருக்கின்றன என்றார்.