கொழும்ப தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி சில நாட்களாக கடும் மன அழுத்ததில் இருந்ததாகவும், மன அழுத்தமே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த ஜூலை 2ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் நெருங்கிய தோழி இவர் எனவும், குறித்த சம்பவத்தையடுத்து மாணவி அதிர்ச்சியில் இருந்ததாகவும் உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த இருவரும், குறித்த பாடசாலை மாணவியும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி உயிரிழப்பதற்கு முன்னர், தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவியிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறும் போது பலமுறை முத்தமிட்டு சென்றுள்ளதாகவும் அவரது தந்தை பொலிஸாரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து மாணவி அதிர்ச்சியில் இருந்ததாகவும், இந்த சம்பவமே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறித்த மாணவி நேற்று முன்தினம் 2.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் டிக்கெட் வாங்கிக்கொண்டு தாமரை கோபுரத்திற்குள் சென்று, சிறிது நேரத்தின் பின்னர் அங்கிருந்த மலசலகூடத்தில் பாடசாலை சீருடையை மாற்றிக்கொண்டு வேறு ஆடையை அணிந்து கொண்டு தாமரை கோபுரத்தின் பார்வையாளர் தளத்திற்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த ஐந்து பாதுகாப்புப் பணியாளர்களின் கவனம் சிதறும் வரை காத்திருந்து பாடசாலை பை, கண்ணாடி மற்றும் காலணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தரையில் குதித்த காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு தாமரை கோபுரம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து குதிக்க மாணவி சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவியின் அடையாளத்தை அடையாளம் காணும் பொருட்டு, அவரது பாடசாலைப் பையை சோதனையிட்ட போது, குறித்த மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருவது தெரியவந்துள்ளது.

அதன்படி, அவர் கொழும்பில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் மகள் என்பது கண்டறியப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாணவியின் பிரேதப் பரிசோதனையில், பலத்த காயங்கள் காரணமாகக் குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 5 பேரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பதின்ம வயது பிள்ளைகளின் நடத்தை தொடர்பில் பெற்றோர்கள் கவனமாக இருந்தால் இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியும் என உளவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *