ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று (23) நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்;

நாட்டின் சம்பிரதாய அரசியல் நடத்தை மற்றும் அரசியல் முறைகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பையும், விரக்தியையும், அவநம்பிக்கையையும் கடந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், இன்னும் நமது அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து நீண்ட காலம் கழிவதற்குள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி, அந்தச் சூட்டைப் பயன்படுத்தி, அலையை உருவாக்கி இலாபம் ஈட்டிக் கொள்ளும், பாரம்பரிய அரசியலை முன்னெடுப்பதை இம்முறையும் பார்க்கிறோம்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து இரண்டு, மூன்று நாட்களுக்குள் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டு, மூன்று நாட்களிக்குள் தேர்தலை அறிவித்து உடனடியக எழுந்த அலையை பாவித்து தந்திரோபாயமாக ஆதாயம் தேடும் முயற்சியை பார்க்கிறோம்.

2019 ஆம் ஆண்டிலும், இவ்வகையான அரசியல் நடத்தை மூலம் உருவாக்கப்பட்ட அலைகளுக்கு பலியாகியதால் ஏற்பட்ட விளைவுகளையும் பேரழிவுகளையும் நாங்கள் கண்டோம். மீண்டும் இதுபோன்ற அலைகளுக்கு இரையாகி அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டுமா? அல்லது இத்தேர்தலில் இந்த பாரம்பரிய அரசியல் நடத்தையில் இருந்து மாறி புத்திசாலித்தனமாகவும் விமர்சன ரீதியாகவும் செயற்படுவதா என்பதை எமது மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

வரலாற்றின் படிப்பினைகளை கற்று, ஆட்சியில் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமநிலையை உருவாக்கும் முடிவை எடுக்க வேண்டும்.

சம்பிரதாய அரசியல் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியும், நடைமுறை ரீதியான வேலைத்திட்டத்துடனும், ஆயத்தங்களுடனும் வெற்றிகரமான உலக நாடுகள் சென்ற வழியில் நாட்டை வழிப்படுத்தக் கூடிய அனுபவமும் திறமையும் வாய்ந்த குழுவைக் கொண்டமைந்த அதிகாரங்களுக்கிடையே தடைகள் மற்றும் சமநிலையை ஏற்படுத்தும் அரசாங்கத்தை அமைப்பது நாட்டுக்கு நல்லது.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது எம்மால் செய்ய முடியுமானதை சொல்லும், சொன்னதைச் செய்ய முடியுமான அரசியல் இயக்கமாகும். எமது கொள்கைகளை வகுத்துள்ளோம். அதை வெளியிட்டும் உள்ளோம். 27 முக்கிய விடயப்பரப்புகளில் நாம் எமது கொள்கைகளை வகுத்துள்ளோம். தலைவரில் தொடங்கி, பலர் இரண்டு வருடங்கள் தங்கள் அறிவையும் நேரத்தையும் செலவழித்து இதற்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

உலக நாடுகளில் முயற்சிக்கப்பட்ட கொள்கை வழிகாட்டுதல்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. புத்திஜீவிகள், சிவில் சமூகம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக சமூகம் இதற்கு பங்களித்தன.

எமது தலைவர் வாரத்தில் இரண்டு நாட்கள் காலை முதல் இரவு வரை இதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட உலக நாடுகளுடன் சிறந்த முறையில் தொடர்புகளை பேண முடியுமான அனுபவம் வாய்ந்த குழு எங்களிடம் உள்ளது. சமூக ஜனநாயக வேலைத்திடமே எங்களிடம் அமைந்து காணப்படுகிறது.

உலக வங்கியின் கூற்றுப் படி, வறுமை விகிதம் 25.9% ஆகும். உலக வங்கியின் 2023 அறிக்கையின்படி, எமது நாட்டில் 61.1% மக்கள் தங்கள் உணவு வேளையை குறைந்துள்ளனர் என சுட்டிக்காட்டுகிறது.

எமது நாட்டில் 50% க்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர். இந்த விபரங்கள் அனைத்தும் 2023 ஐக்கிய நாடுகள் ஸ்தாபன வெளிப்படுத்தல்கள் ஆகும். ஆகவே இம்மக்கள் குறித்து முன்னுரிமை வழங்கி செயற்படுவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். சமூக நீதி மற்றும் வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி மக்களிடம் முன்வைத்துள்ளது.

27 கொள்கை வெளியீடுகளை முன்வைத்துள்ளோம். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு முக்கிய பிரச்சினைக்கும் தீர்வு காணும் நடைமுறை திட்டத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம். நாங்கள் முன்வைத்துள்ள விவசாயம், கல்வி பொருளாதார கொள்கைகளைப் பாருங்கள் எமது கொள்கைகளை ஏற்று, எமது அணியை ஏற்று, அதன் மூலம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்ற அனைவருக்கும் இரண்டு வேண்டுகோள்களை விடுப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, நவம்பர் 14 ஆம் திகதி முன்னதாகவே சென்று வாக்களியுங்கள். ஜனாதிபதித் தேர்தலின் பின்னடைவைக் கண்டு தயங்காமல் வாக்கைப் பயன்படுத்துங்கள்.

இரண்டாவதாக, ஊடகங்களில் எமக்கான இடம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், எம்மை நம்பி வாக்களிக்காத, எம்மை நம்பாத புதிய வாக்காளர்களுக்கு, மாற்று அரசியல் கட்சிகளை நம்பியுள்ள மக்களுக்கு, எந்தத் தரப்பினரையும் நம்பாமல் வாக்களிக்கச் செல்லாம் இருப்போருக்கு, எங்கள் திட்டத்தை எடுத்துச் சொல்லி, அவர்களை நம்ப வைக்க இந்த சில நாட்களில் வேலை செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

அதனை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் சரியான நிலைப்பாட்டில் இருக்கிறோம். இவ்வழியில் சென்றால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். உலகத்தில் தனித்து நிற்காமல் நாடு வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளும் வழி இதுதான்.

வேறு வழியில்லை. இதை நம்ப வைக்க வேலை செய்யுங்கள். எமக்கு வாக்களிக்காத ஏனைய குடிமக்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அலைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஆட்சியில் அதிகாரங்களுக்கு இடையே தடைகள் மற்றும் சமநிலை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளியுங்கள்.

தயவு செய்து எமது கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறுத்து வாசித்துப் பாருங்கள். இது குறித்த அறிவார்ந்த உரையாடல்களை நடத்துங்கள்.சமூக ஜனநாயக வேலைத் திட்டத்தைக் கொண்ட பலம்பொருந்திய ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இந்த நாட்டில் அதிகாரங்களிடையே சமநிலை பேணும் அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல உங்கள் பங்களிப்பை எமக்கு வழங்குங்கள். இன்று உலகம் மாறிவிட்டது.

சீனா, வியட்நாம் மாறிவிட்டன. எனவே, சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தற்போதைய ஜனாதிபதி இணைந்து செயற்படுவதற்கு எந்தத் தடையும் இருப்பதாக நான் காணவில்லை.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கச் செல்லாத இலட்சக்கணக்கான வாக்காளர்கள் உள்ளனர். இதில் எக்காரணம் கொண்டும் வாக்களிக்கச் செல்லாதவர்கள் எமது வேலைத்திட்டம் குறித்து உன்னிப்பாக பார்க்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், எமது தொகுதி அமைப்பாளர்களிடம் பேசுங்கள். எமது வாக்குச்சாவடி முகவர்களிடம் பேசுங்கள். எங்களிடம் பேசுங்கள். இது குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அது குறித்து நாங்கள் அவதானம் செலுத்துவோம். நீங்கள் வாக்களிக்கச் செல்லாவிட்டால், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் பாதையில் நாடு வீழக் கூடும்.

இறுதியாக, நாட்டை சரியான பாதையில், அர்த்தமுள்ள நடைமுறை ரீதியிலான பாதையில் கொண்டு செல்வதற்கு அறிவார்ந்த முடிவை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *