
“இறக்குமதி செய்யப்படும் அரிசி, கிலோ ஒன்றுக்காக அரசாங்கம் விதித்துள்ள 65 ரூபா வரியால் அதிக இலாபம் ஈட்டப்படுகிறது.இதுவொரு அரிசி மாபியாவாகும்.வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவே இதற்கு வழிசமைத்தவர்’’ என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர்உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,‘‘நாட்டரிசியின் நிர்ணய விலை 230 ரூபா என ஜனாதிபதி அடித்துக்கூறினாலும் நான் நேற்று நாட்டரிசியை 240 ரூபாவுக்கே வாங்கினேன்.
கடந்த போகத்தின்போது சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 170 ரூபாவாக இருந்தது. இதன்போது ஒரு கிலோ அரிசி 170 ரூபாவுக்கு விற்பதற்காக தமக்கும் ஒருதொகை இலாபம் கிடைக்கும் வகையிலேயே விவசாயிகளிடமிருந்து அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை கொள்வனவு செய்தனர்.
அதனடிப்படையில், அவர்களுக்கு 05ரூபா இலாபம் கிடைத்திருக்கும்.
அவ்வாறெனில், தற்போது ஜனாதிபதி கூறும் நிர்ணய விலையான 230 ரூபாவுக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்றதென்றால் கட்டாயமாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு 65ரூபாவாவது இலாபம் கிடைக்கவேண்டும்.
வரலாற்றில் சந்தையில் அரிசிக்கான விலையை சமமான மட்டத்தில் பேணுவதற்காகவே வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தார்கள்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை 210 ரூபா எனின் 230 ரூபாவாக காணப்படும் உள்நாட்டு அரிசியின் விலையை 210 ரூபாவுக்கோ அல்லது அதற்கு அண்மித்த விலைக்கோ விற்பனை செய்யவேண்டும்.
தேசிய அரிசி உற்பத்தியாளர்களை நாடும் நுகர்வோரை பாதுகாத்து இவ்வாறு அரிசி விலைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. இல்லையேல், நுகர்வோர் உள்நாட்டு அரிசி நுகர்வை கைவிட்டு விட்டு இறக்குமதி அரிசியை கொள்வனவு செய்வர்.
அவ்வாறெனில், இதற்கு மாற்றுத்தீர்வுக்காக முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45ரூபா என்ற ரீதியில் வரி விதித்து உள்நாட்டு அரிசியின் விலை 230ரூபாவாக நிர்ணய விலையில் பேணியிருக்க வேண்டும்.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் அரிசியை 210 ரூபாவுக்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை சந்தைக்கு விடும்போதும் உள்நாட்டு அரிசியும் 210 ரூபாவை அண்மித்த விலைக்கு விற்கப்பட்டிருக்கும்.
இதன் பின்னர் 45ரூபாவாக இருக்கும் வரியில் மேலும் 30ரூபாவை குறைத்து 15ரூபாவுக்கு கொண்டு வந்திருக்க முடியும்.
இதன்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி 180ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். இதன்மூலம் உள்நாட்டு அரிசியும் 180 ரூபாவுக்கு விற்பனையாகும்.
ஆனால், நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு அரசாங்கம் 65 ரூபா என்ற ரீதியில் வரி விதித்தது.
இதன்மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசியின் விலையும் சந்தையில் தற்போது கிடைக்கப்பெறும் ஒரு கிலோ உள்நாட்டு அரிசியின் விலையும் சரிக்கு சமமாக பேணப்படுகிறது.
எனவே, ஒரு கிலோ அரிசியின் மூலம் 65 ரூபாவுக்கும் அதிக இலாபம் கிடைக்கிறது.எனவே இதுவொரு அரிசி மாபியாவாகும்.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவே இதற்கு வழிவகுத்தார். அவரே இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 65 ரூபா என்ற வரிவிதிப்பு என்ற யோசனையை முன்வைத்தவர்.
இல்லையேல் தற்போது எம்மால் 180 ரூபாவுக்கோ அல்லது அதற்கும் குறைவான விலையிலோ அரிசியை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.
அரிசிக்கான வரி விதிப்பினூடாக அதிக இலாபத்தை உழைக்கும் அரிசி மாபியாவுக்கு வழிசமைத்த அமைச்சர் வசந்த சமரசிங்கவே நாட்டின் அரிசி மாபியாவின் தளபதி’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.