
‘‘எதிர்க்கட்சியிலுள்ள எங்களுக்கு பாதுகாப்பு அவசியமில்லை. அரசாங்கத்திலுள்ளவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடும் நிலைமை உருவாகும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அதன்போது அவர் மேலும் கூறுகையில்,கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்காக 70 இலட்சம் ரூபா செலவாகியுள்ளது என்று நான் கூறிய கருத்தில் மாற்றமில்லை. அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன்.
நான் இந்த விடயத்தை கூறிய மறுநாளே சிரேஷ்ட கணக்காய்வாளர், கணக்காளர் ஆகியோரை ஜனாதிபதி செயலாளர் அழைத்து அந்த செலவுகளை 09 இலட்சமாக மாற்றியுள்ளனர். இதனை நான் எந்த இடத்திலும் கூறுவேன். அத்துடன் கிறிஸ்மஸ் தினத்தில் காலி முகத்திடலில் மின்விளக்கு, ட்ரோன் கண்காட்சி ஆகியன நடத்தப்பட்டுள்ளன.
இதற்காக ஹனீப் யூசுப் என்ற உங்களின் ஆளுநர் பணம் செலவழித்துள்ளார். ஆளுநருக்கு இந்தளவு செலவு செய்ய என்ன தேவையுள்ளது?கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நல்ல திட்டம்தான். ஜனவரி முதலாம் திகதி அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் 10 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 07 மனித கொலைகளும் நடந்துள்ளன. அண்மைக் காலத்தில் அதிகளவான துப்பாக்கிச்சூடுகள் ஜனவரி முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே நடந்துள்ளன.
கிளீன் ஸ்ரீலங்கா என்றால் மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அப்போதே நாடும் மக்களும் தூய்மையாவர். முதலில் பாதாள குழுக்களையும் போதைப்பொருட்களையும் ஒழிக்க வேண்டும். குப்பைகள் எடுப்பதை பின்னர் செய்யலாம். பிலிப்பைன்ஸ் எவ்வாறு இருக்கின்றது என்பதனை பாருங்கள். 02 வருடங்களுக்கு முன்னர் இருந்த பிலிப்பைன்ஸ் இப்போது இல்லை.
அது போன்று இலங்கையை தூய்மையாக மாற்றுங்கள்.தற்போதைய ஜனாதிபதியே நாட்டில் இதுவரை நியமிக்கப்பட்ட ஜனாதிபதிகளில் இளமையானவர். ஆனால் இந்த ஜனாதிபதி களுத்துறையில் ஆற்றிய உரையை பாருங்கள். முடிந்தால் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை எடுத்துக்காட்டுங்கள். 47 இலட்சத்துக்கு வாடகைக்கு வழங்கி காட்டுங்கள். அதனை கொண்டை கட்டிய சீனர்களுக்குதான் கொடுக்கலாம்.
மஹிந்த ராஜபக்ஷ அந்த வீட்டில் இருந்து வெளியில் போனாலும் அவருக்கு வீட்டை வழங்க பலரும் உள்ளனர். சந்திரிகாவின் குடும்பத்தினரே இந்த நாட்டுக்கு காணிகளை பகிர்ந்து கொடுத்துள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு போனார்கள் என்றால் அவர்களின் பெயர்கள் இல்லாமல் போகாது.இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பையும் நீக்கிக்காட்டுங்கள்.
அவருக்கு பாதுகாப்பு வழங்க தெற்கிலிருந்து வேண்டியளவு மக்கள் வருவார்கள். மைத்ரிபால சிறிசேன, சந்திரிகா எவராக இருந்தாலும் அவர்கள் இந்த நாட்டின் முன்னாள் தலைவர்களே. ஜனாதிபதி தும்முலை விமலே போன்றே நடந்துகொள்கின்றார். அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம்.
இதேவேளை எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர். எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. வேண்டுமென்றால் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். இன்னும் ஆறு மாதங்களில் உங்களுக்கே பாதுகாப்பை தேட வேண்டி வரும்.அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுடன் சண்டையிட்டு பலனில்லை. அவரின் மகன் இருக்கின்றார் அவருடன் மோதுங்கள்.
சந்திரிகாவுடன் சண்டையிட்டும் பலனில்லை. அவர்கள் வயது போனவர்கள். எதிர்கால தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுடன் மோதுங்கள் என்றார்.