சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணை நிதி மீளாய்வு பற்றி கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே நாங்கள் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது, மேலும் இந்த முன்னேற்றம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவரை பெற்ற வெற்றிகளை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
IMF-ஆதரவு திட்டத்திற்கு, குறிப்பாக நிதி மற்றும் கடன் இலக்குகள் தொடர்பாகபுதிய அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாக சீனிவாசன் மேலும் வலியுறுத்தினார். “அடுத்த மறுஆய்வு பற்றிய விவாதங்களைத் தொடர இலங்கையில் இருந்து குழுவொன்று வாஷிங்டனில் இருக்கின்றது. பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது பரிசீலனைக்காக இந்த பேச்சுவார்த்தைகளை தொடர இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலை நடத்தவுள்ளோம்” என்று அவர் கூறினார்.