இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை ஒழித்தல் தொடர்பில் சட்டமா அதிபரினால் புதிய கொள்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கைத் திட்டமானது பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கொள்கைத் திட்டம் நீதிமன்றத்திற்கு கையளிக்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த பிரதம நீதியரசர், குறித்த கொள்கைத் திட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும் என்றும், உத்தேச திருத்தங்கள் இறுதி வரைவில் இணைக்கப்பட வேண்டும் என்றும், இறுதி வரைவைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்
.அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரரினால் கோரப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடிவதை சம்பவத்தின் போது ஒரு பெரிய பெக்கோ இயந்திரத்தின் சக்கரம் கீழே உருட்டப்பட்டதால் தனக்கு கடுமையான உடல் காயங்கள் ஏற்பட்டதுடன் மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மனுதாரர் மேலும் கூறினார்.