பேருவளை அப்ரார் கல்வி நிலைய ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு தமது கல்வியை இடையூறுன்றி தொடர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி (2024-12-16) திங்கட்கிழமை பி.ப 4.00 மணிக்கு பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறும்.அப்ரார் கல்வி நிலைய ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பாகிஸ்தான் நாட்டின் இலங்கை உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீமும் அஸீஸ் பிரதம அதிதியாகவும், கட்டார் செரட்டி இலங்கை பணிப்பாளர் முஹம்மத் அபூ கலீபா கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்வர் என கல்வி நிலைய செயலாளர் கலாநிதி. மெளலவி எம் அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) தெரிவித்தார்.

பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலை, மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயம், மஹகொடை ஐ.எல்.எம் ஸம்ஸுதீன் மகா வித்தியாலயம், மஸ்ஸல பெளத்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலைகளில் கல்வி பயிலும் 50 வறிய மாணவர்களுக்கு இதன் போது புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக தலைவர் அல்-ஹாஜ் முஹம்மத் நிஸாம் ஜே.பி தெரிவித்தார்.

நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆறு பாடசாலைகளினதும் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள், கல்விமான்கள், பாடசாலை சங்க உறுப்பினர்கள், அப்ரார் கல்வி நிலைய முக்கியஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொள்வர்.

பல முஸ்லிம் நாடுகளில் தூதரகங்கள், பரோபகாரிகள், பிரதேச தலைவர்களின் நிதி உதவியுடன் அப்ரார் கல்வி நிலையம் கடந்த 10 வருடங்களாக பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு தமது கல்வியை இடையூறுன்றி தொடர புலமைப் பரிசில் வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்ரார் கல்வி நிலையத்தின் மூலம் புலமைப் பரிசில் பெற்று கல்வியை பூர்த்தி செய்து தொழில்களை பெறுபவர்கள் கூட இன்று புலமைப் பரிசில் திட்டத்திற்கு உதவி செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பேருவளை அப்ரார் கல்வி நிலையம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இப்பணியை செவ்வனே மேற்கொண்டு வருகின்றமையினால் தனவந்தர்கள், பரோபகாரிகள் உதவிக் கரம் நீட்டியும் வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *