
பேருவளை மருதானை யாஸிர் அரபாத் மாவத்தையில் உள்ள அல்-பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலையில் மர்ஹும் அல்-ஹாஜ் நாஸிம் பாச்சா மரிக்கார், மர்ஹூமா ஹாஜியானி ஸித்தி ஹதீஜா ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவர்களது பிள்ளைகளினால் பல இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று 2ஆம் திகதி வியாழக்கிழமை (2025-01-02) மு.ப 10:00 மணியளவில் நடை பெறும்.
பேருவளை நகரசபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளருமான அல்-ஹாஜ் அரூஸ் அஸாத், பிரபல சமூக சேவையாளர்களான, அல்-ஹாஜ் தஸ்தகீர் பாச்சா, முஹம்மத் பலூல் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் மர்ஹூம் நாஸிம் பாச்சா மரிக்கார் தம்பதிகளின் புதல்வர்களால் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிபர் திருமதி யெஹியா ஹுதைர் தலைமையில் நடைபெறும் திறப்பு விழாவில் மர்ஹும் நாஸிம் பாச்சா மரிக்கார் தம்பதிகளின் பிள்ளைகள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைப்பர்.நான்கு மாடிகளைக் கொண்ட இக் கட்டிடத்தில் இரு மாடிகள் பூர்த்தி செய்யப்பட்டு முதல் கட்டமாக திறந்து வைக்கப்படுகிறது.
மேற்படி, பாடசாலையில் நிலவும் இடப் பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் மர்ஹும் அல்-ஹாஜ் நாஸிம் பாச்சா மரிக்கார் (ஜே.பி), மர்ஹூமா ஹாஜியானி ஸித்தி ஹதீஜா தம்பதிகளின் பிள்ளைகளினால் பாடசாலைக்கு அருகே காணியொன்று வாங்கப்பட்டு நான்கு மாடிகளை கொண்ட கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இரு மாடிகளின் நிர்மாண வேலைகள் தற்போது பூர்த்தியாகியுள்ளது.
பேருவளையைச் சேர்ந்த மர்ஹூம் ஸிராஜுதீன் மரிக்கார் (தீன் முதலாளி) அவர்களின் புதல்வரான மர்ஹும் அல்-ஹாஜ் நாஸிம் பாச்சா மரிக்கார் பிரபல சமூக சேவையாளராக விளங்கினார்.
இவர் இலங்கையின் முன்னணி இரத்தினக்கல் வர்த்தகராக திகழ்ந்த சிறீலங்கா சிஹாமணி மர்ஹும் ஸேம் ரிபாய் ஹாஜியாரின் மைத்துனராவார்.அல்- பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலையில் நிலவும் இட நெருக்கடியை தீர்த்து வைக்கும் மற்றுமோர் முயற்சியாக புதிய கட்டிடமொன்றை நிர்மாணிக்க முன்வந்தமை குறித்து பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், ஊர் மக்கள், மர்ஹூம் நாஸிம் பாச்சா மரிக்காரின் பிள்ளைகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
திறப்பு விழாவில் கல்வி அதிகாரிகள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொள்வர்.