
சுற்றுச்சூழலுக்கு தீங்தானியுகு விளைவிக்கும் மன்னார் விடத்தல்தீவு பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக இந்திய நிறுவனமான அடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய தீர்ப்பளிக்கக்கோரி இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சங்க்க சந்திம அபயவர்தன தாக்கல் செய்த ரிட் மனுவை மே 23 ஆம் திகதி விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.யூ.பி.கரலியத்த முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்தத் திட்டம் தொடர்பான பல முக்கியமான வழக்குகள் அடுத்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
அதேசமயம் இந்தத் திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்தே மனுவை மே 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த காற்றாலை மின் திட்டம் செயற்படுத்தப் பட்டால், இலங்கைக்குள் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் நுழையும் பாதை பாதிப்படையும் என்றும் அதனால் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இறக்கும் அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட திட்டத்தை செயற்படுத் துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளார்.