
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மூவரையும் அந்த வழக்கிலிருந்து முழுவதும் விடுவிக்க முடியுமென்று கல்கிஸை நீதவானுக்கு அறிவிக்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.
இராணுவ பதவிநிலை சார்ஜன்ட் பிரேம் ஆனந்த உதலாகம, உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிறி சுகத பால, பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோரை விடுவிக்குமாறே சட்ட மா அதிபரினால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் மூவர் தொடர்பில் தொடர்ந்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்றும் சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்திருக்கிறார்.
சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கடந்த 27ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பி வைத்தே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் இந்த விடயத்தை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்ததன் பின்னர் அதுதொடர்பில் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை 14 நாட்களுக்குள் தனக்கு அறிவிக்குமாறும் சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்