
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் கட்சிகளின் பேச்சில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டு சேர்வதற்கு அழைப்பு வந்தால், தாம் அது தொடர்பில் கலந்துரையாடத் தயார் என தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்க் கட்சிகளை மீண்டும் இணைக்க தாம் முயற்சிப்பதாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ள நிலையில், கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தமிழரசுக் கட்சி தனித்தே தேர்தலில் போட்டியிடும் என ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கூட்டணி என கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அணியினர் ஆகியோர் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் இன்னமும் தீர்க்கமாக முடிவெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.