
எரிபொருள் நிலைய உரிமையாளர்களின் விலைக்கழிவு கொடுப்பனவில் 03 சதவீதக் குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் கோராத போராட்டம் தொடரும் என்று பெற்றோலிய பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று (02) பிற்பகல் தெரிவித்தார்.
எரிபொருள் நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்ந்தும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அந்த இருப்பு தீர்ந்தவுடன், பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் இன்று (03) கையிருப்பில் இல்லாமல் போய்விடும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இந்த நடவடிக்கைக்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் இரவு 8:00 மணிக்கு மூடப்படும் என்றும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிலையங்கள் முன்பு 24 மணி நேரமும் எரிபொருளை வழங்கியதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை விண்ணப்பம் செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்கள் எரிப்பொருளை பெற்றன. ஆனால் ஞாயிறு எந்த கோரல்களும் வழங்கப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
எரிபொருள் நிலைய உரிமையாளர்களும் வியாபாரம் செய்வதால், அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அந்த அதிகாரி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு விரைவில் பேச்சு நடத்துமென்று நம்புவதாகவும் கூறினார்.
எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுகிறது
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் தடையின்றி விநியோகிக்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று (03) மற்றும் நாளைய தினத்துக்கு(04) தேவையான எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் உரிமையாளர்கள், பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து நேற்று முன்தினம் முதல் ஒருதரப்பினர் எரிபொருள் வரிசைகளில் நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 03 வீத கழிவுக் கொடுப்பனவை இரத்துச்செய்யும் நடைமுறை நேற்றுமுன்தினம் (01) முதல் அமுலுக்கு வந்தது.
நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேற்று (02) காலை அறிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கமைய 66,188 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 9,444 மெட்ரிக் தொன் சுப்பர் டீசலும் தற்போது கையிருப்பில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
87,180 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல், 13,767 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 07 நாட்களுக்குள் 4,626 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 111 மெட்ரிக் தொன் லங்கா சுப்பர் டீசலும் 3,806 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் 119 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.