
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டு வந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படுமென பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நிதி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் கடமையை பூர்த்தி செய்திருந்தால், அவர் பாராளுமன்ற ஓய்வூதியத்துக்கு உரித்துடையவராவார் என்பதுடன், அவர் ஓய்வு பெற்றவுடன் ஜனாதிபதி பதவிக்கான ஓய்வூதியமும் வழங்கப்படும்.
அதனடிப்படையில், தனக்கு இரு ஓய்வூதியங்கள் அவசியமில்லை என்று கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு முன்பே, அவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் பாராளுமன்ற நிதி பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.